சகுனி - சினிமா விமர்சனம்
நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர்
இசை: ஜீவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: பிஜி முத்தையா
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
இயக்கம்: சங்கர் தயாள்
அரசியலை மையமாக வைத்து சடையர் வந்து நாட்களாகிவிட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும். ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்துவைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று!
கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியதுதான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும் என்றே தோன்றுகிறது.
காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!
முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை.
தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.
விடலைத்தனமான லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான, புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது.
குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை.
முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்!
முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி!
சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று பதிகிறது.
என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!"
பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும்போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ 1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது!
மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை!
கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை.
இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!
ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்துவிட்டதுபோன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம்.
கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார்!
Labels: சினிமா விமர்சனம்